|
|
கொடைக்கானல் வனப்பகுதி |
கொடைக்கானல் இயற்கை அமைப்பு
கொடைக்கானல் வனக்கோட்டம் அரசாணை எண். 468 வனம் மற்றும் மீன்துறை நாள் 19.04.1982 -ன் படி உருவாக்கப்பட்டு, 30.04.1982 முதல் செயல்பட்டு வருகிறது.
|
|
கொடைக்கானல் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 40,740.48 ஹெக்டேர். இக்கோட்டத்தில் 7 டெரிடோரியல் வனச்சரகங்களை உள்ளடக்கி மொத்தம் 9 வனச்சரகங்கள் உள்ளன. கொடைக்கானல் கோட்டமானது 10º 20" - 10º 5" - வடக்கு அட்சரேகைக்கு இடையிலும் 76º 16" - 76º 45" கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. இக்கோட்டத்தின் மேற்கு திசையில் கேரள மாநிலமும், கோயம்பத்தூர் வருவாய் மாவட்டம் வடமேற்கிலும், திண்டுக்கல் வனக்கோட்டம் வடகிழக்கிலும் தேனி வனக்கோட்டம் தெற்கிலும் அமைப்பெற்றுள்ளது.
|
|
மேற்குத்தொடர்ச்சி மலையுடன் இணைந்த ஒர் அங்கமாக கிழக்கு நோக்கி நீண்டு பழனிமலையில் இக்கோட்டம் அமைந்துள்ளது. பழனிமலையானது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு மேல் பழனிமலை மற்றும் கீழ் பழனிமலை என இயற்கை எல்லைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பழனிமலையானது 2000மீ முதல் 2654 மீட்டர் வரை உயரமான குன்றகள், புல்வெளிகள், சமவெளிகள், சோலைவனங்கள், சதுப்பு நிலங்கள், பசுமைமாறாக் காடுகள் மற்றும் நன்னீர் சூழல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
மலை மற்றும் சமவெளிகளின் மடிப்புகளில் சோலைக்காடுகள் அமைந்துள்ளன. உயிரின மாறுபாடுகளுக்கும், நீரியல் சுழற்சிட்கும், சோலைக்காடுகள் முக்கிய பயனளிக்கின்றன. இக்கோட்டத்தில் உள்ள சோலைக்காடுகளின் மொத்த பரப்பு 2337 ஹெக்டேர் ஆகும் . புல்வெளிக் காடுகள் 16627 ஹெக்டேர் ஆகும்.
சோலைக்காடுகள்
சோலை என்ற வார்த்தை பசுமை மாறாமல் இருக்கும் காடுகளை குறிப்பதாகும். தற்பொழுது தென்மேற்கு மலைத்தொடரில் குறிப்பாக நீலகிரி, ஆனைமலை மற்றும் பழனி மலை ஆகிய மலைகளின் பள்ளத்தாக்குகளிலும், சமவெளிகளிலும் காணப்படும் வாழும் படிமங்களாக அவைகள் அமைந்துள்ளன. சோலைக்காடுகள் கடல் மட்டத்திலிருந்து 1500மீ முதல் 1800மீ உயரங்களுக்கும் மேற்பட்ட மலைகளில் காணப்படுகின்றன. 2400 மீட்டரில் தனித்தன்மையுடனும் சோலைக்காடுகள் காணப்படுகின்றன.
|
|
சோலைக்காடுகளில் காணப்படும் மரங்கள் வளர்ச்கி குன்றியும், ஒழுங்கற்ற குறுக்கு நெடுக்காக உள்ள கிளைகளுடனும், வெவ்வேறு விதமான வண்ணங்களுடன் கூடிய இலைகளுடனும் காணப்படுகின்றன. குறுக்கு நெடுக்காக உள்ள கிளை அமைப்புக்களால் சூரிய ஒளியானது தரையினை தொட முடிவதில்லை, எனவே சோலைக்காடுகளின் உள்ளே எப்பொழுதும் குளிர்ச்சியான சூழ்நிலையும், சிறு உயிரிகள் பெறுகுவதற்கு ஏற்றதாகவும் உள்ளது. பல வகையான பாசிகள், பெரணிகள், சிறு உயிரினங்கள் மற்றும் சாறுண்ணிகள் போன்றவை இந்த சூழ்நிலையில் மிகவும் வேகமாகவும் அதிகளவிலும் உற்பத்தியாகின்றது. இப்பகுதியில் காணப்படும் சில புல்வெளிகள் இமயமலைத் தொடரில் வளரும் புல்வெளிகளுடன் ஒத்து போவதாக கூறுகின்றனர்.
பழனிமலைப் பகுதியின் வடக்குப் பகுதியில் எண்ணிக்கையில் அதிகமுள்ள சிறிய நீரோடைகளான குண்டார், பரப்பலாறு, மஞ்சளாறு, பேரிஜம், கொடைக்கானல் ஏரி ஆகியவை மலையைச் சுற்றியுள்ள நீர்த்தேக்க அணைகளைச் சென்றடைகின்றது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் வெப்பநிலை சரசரியாக முறையே 21.57º டிகிரி சென்டிகிரேட் மற்றும் 4.4º டிகிரி சென்டிகிரேட் என பதிவாகியுள்ளது. வருடாந்திர மழை அளவானது 1509.9 மி.மீ. ஆகும் . சராசரியாக வருடத்திற்கு 93 நாட்கள் மழை பொழியும்.
இந்த கோட்டத்தில் வெவ்வேறு வகையான வனங்களும் பல்வேறு வன வேறுபாடுகளும் கொண்ட ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தாவர கட்டமைப்பு காணப்படுகிறது. இந்த தாவர தகவமைப்பில் தன்னகத்தே கொண்டுள்ள தனக்கே உரித்தான 46 அழியும் தருவாயில் உள்ள தாவர வகைகளும், 12 அழிந்த தாவர இனங்கள் மற்றும் 60 புதிய தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர உலகிலேயே அனைவராலும் பெரிதும் விரும்பக்கூடிய 82 வகையான ஆர்க்கிடு எனப்படும் செடி இனங்களும் காணப்படுகின்றன.
|
|
சேம்பியன் மற்றும் சேத் ஆகியோர்களின் வன வகைப்பாடுகளின்படி கீழே காணப்படும் வன வகைகள் இக்கோட்டத்தில் அடங்கியுள்ளன.
- மேற்கு கடற்கரை வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள்.
- மேற்கு கடற்கரை முற்றுப்பெறாத வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள்.
- ஈரமூங்கில் புதர் காடுகள்.
- தென்னிந்திய ஈர கலப்பு இலையுதிர்காடுகள்.
- தென்மண்டல இரண்டாம் நிலை ஈர இலையுதிர் காடுகள்.
- வறண்ட வெப்பமண்டல ஆற்றுப் படுகை காடுகள்.
- தென்மண்டல வறண்ட கலப்பு இலையுதிரா காடுகள்.
- தென்னிந்திய மித வெப்ப மண்டல சவானா புல்வெளிகள்.
- தென்மண்டல ஈர குளிர்காடுகள் (சோலைகாடுகள்).
- தென்மண்டல ஈர முட்புதர்கள்.
- தென்மண்டல ஈர புல்வெளிகள்.
இயற்கைக் காடுகளைத் தவிர, வெளிநாட்டுத் தாவரங்கள் ஆங்கிலேயர் காலம் முதல் பெரிதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவைகளில் தைலமரம், சீகை மரம், பைன், தீ்ப்பெட்டி மரம் ஆகியவை முக்கியமானவைகள் ஆகும்.
|
வனவிலங்குகள்
சிறுத்தை, செந்நாய், கரடி, புள்ளிமான், கடமான், வரையாடு, மலைஅணில், யானை, காட்டுமாடு, நீலகிரி கருங்குரங்கு, சாம்பல் நிறக் குரங்கு, தேவாங்கு, காட்டுப்பன்றி, முள்ளம் பன்றி, சருகுமான், கேளையாடு, முயல், கீரி, புனுகு பூனை, காட்டு எலி, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், தவளை, தேரை, ஆமை, மீன் வகைகள். வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் ஏறத்தாழ 215 விதமான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு பறவையினங்கள் அழயும் நிலையில் உள்ளன. 7 வகையான பறவை இனங்கள் உலகில் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.
அழியும் நிலையிலுள்ள பறவையினங்கள்:
- நீலகிரி மரப்புறா
- நீலகிரி பிப்பிட்
- ஒயிட் பெல்லிட் சார்ட்விங்
- மலபார் சாம்பல்நிறமலை மொங்கான் / சாம்பல் ஆத்தி
இங்கு மட்டுமே காணப்படும் பறவையினங்கள்:
- கருப்பு மற்றும் ஆரஞ்சு ப்ளைகேட்சர்
- நீலகிரி ப்ளை கேட்சர்
- ஒயிட் பெல்லிட் ப்ளு கேட்சர்
- சிறிய தேன்சிட்டு
- சாம்பல்நிற கொண்டை குருவி
- கிரே ப்ரஸ்டட் லாபிங் திரஸ்
- இந்தியன் ரூப்பஸ் பாப்லர்.
|
|
|
|
|